இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை 2 நாட்களாக வீட்டிலேயே ஐஸ்கிரீம் ப்ரீசரில் வைத்திருந்த குடும்பத்தினர்! அதிர்ச்சி பின்னணி!

Summary:

Family members kept deadbody in icecream freezer

கொல்கத்தாவில் கடந்த ஜூன் 29ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பரிந்துரை செய்த நிலையில், கொரோனா  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது. 

அதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அந்த முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில் கொரோனா  பரிசோதனை முடிவுகள் வராதநிலையில் இறப்புசான்றிதழ் தர முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் இறப்புச் சான்றிதழ் இல்லாமல் மயானத்தில் அடக்கம் செய்யவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த குடும்பத்தினர் சுகாதாரத்துறை, மாநகராட்சி,  காவல்துறை, அரசியல்வாதிகள் என அனைவரின் உதவியை நாடியும் யாரும் உதவ முன்வரவில்லை. இந்நிலையில் அவர்கள்  முதியவரின் உடல் அழுகி விடாமலிருக்க வீட்டிலேயே ஐஸ்கிரீம் ஃப்ரீசர் பாக்ஸில் உடலை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இருநாட்கள் அவரது உடல் ஃப்ரீசர் பாக்சில் இருந்த நிலையில் சமீபத்தில் மாலை முதியவருக்கு கொரோனா  பாசிட்டிவ் என முடிவுவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். முதியவர் உயிரிழந்த 50 மணி நேரத்திற்கு பின்னர் அந்த கட்டிடம் மற்றும் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement