கொரோனாவை ஒழிக்க ஒரே வழி! மக்களே உஷார்!

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கும் விரிவடைய வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை கொரோனா பரவாமல் இருப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே. எனவே இந்த தடை உத்தரவினால் யாரும் அச்சப்படத்தேவையில்லை. இதுபோன்ற சமயங்களில் பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தலால், இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை விடுத்துள்ளனர். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை அனைத்தும், கொரோனாவை ஒழிக்கவும், கொடிய வைரஸிடமிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தான். எனவே பொதுமக்கள் இந்த விடுமுறையை பயன்படுத்தி குடும்பத்துடன் சுற்றுலா செல்வது, அதிக மக்கள் கூடும் இடத்திற்கு செல்வது போன்றவற்றை தவிர்ப்பது அவசியம். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும்.