
சிரியா நாட்டில் கிணற்றுகில் விழுந்த நான்கு வயது சிறுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்
சிரியா நாட்டில் கிணற்றுகில் விழுந்த நான்கு வயது சிறுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிரியா நாட்டின் அலெப்பே பிரதேசத்தில் அமைந்துள்ளது, அல்-பாப் என்னும் நகரம். இந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நான்கு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே இருந்த கிணறு ஒன்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
குடிநீருக்காக வெட்டப்பட்ட குறுகிய அகலமே கொண்ட ஆழமான கிணற்றுக்குள் விழுந்த அந்த குழந்தை, கிணற்றுக்குள் விழுந்த பயத்தில் "அம்மா.. அம்மா.. என்னை காப்பாற்று" என கதறி அழுதுள்ளார். குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த அவரது தாய், தனது குழந்தை கிணற்றுகில் விழுந்து கிடப்பதை கண்டு கதறி துடித்துள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவிக்க, அங்கிருந்தவர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கிணறு மிகவும் கரடு முரடாகவும், குறுகியதாகவும் இருந்ததால் அவர்களால் கிணற்றுக்குள் இறங்க முடியவில்லை. இதனை அடுத்து அலெப்பே பிரதேச White helmets என்று அழைக்கப்படும் பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படை வீரர்கள், கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி, அங்கு இருட்டுக்குள் பயத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். கிணற்றில் இருந்து வெளியே வந்ததும், “எனது பொம்மை எங்கே?” என்று குழந்தை கேட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கிணற்றுக்குள் விழுந்த சில மணி நேரத்தில் மிகவும் துரிதமாக செய்யப்பட்டு குழந்தையை மீட்ட பாதுகாப்பு படைவீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.
Advertisement
Advertisement