தமிழகம்

தனியாக தெரிந்த சடலத்தின் கை.. மனைவியுடன் படுக்கை வரை சென்ற நண்பன்.. பகீர் கிளப்பும் புதுவை சம்பவம்..

Summary:

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவி கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் சத்யராஜ். மினி வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சத்யராஜ் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியில் இருந்து காணவில்லை. இதனால் தனது கணவரை தேடி தருமாறு சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் அவரது மனைவி தீபா புகார் கொடுத்துள்ளார்.

புகாரை அடுத்து போலீசார் சத்தியராஜை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ள மானாவாரி மைதானம் ஒன்றில் ஆண் சடலம் ஒன்றின் கை ஒன்று வெளியே தெரிவதாக புவனகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தாசில்தார் சுமதியின் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் அது காணாமல் போனதாக தேடப்பட்டுவரும் சத்யராஜின் சடலம் என போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து சத்யராஜின் மனைவி தீபாவிடம் போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் அவர் பல்வேறு அதிர்ச்சியான தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளார். சத்யராஜின் வீட்டுக்கு அவரது நெருங்கிய நண்பரான ஐயப்பன் என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது, தீபாவுக்கும், ஐயப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சத்யராஜ் வீட்டில் இல்லாதபோது இருவரும் சேர்ந்து வீட்டில் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இது எப்படியோ சத்யராஜுக்கு தெரியவர அவர் தனது மனைவி மற்றும் நண்பனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், சத்யராஜை கொலை செய்த திட்டமிட்டு அதற்காக கூலிப்படை ஒன்றை தயார் செய்துள்ளனர்.

பின்னர் திட்டமிட்டபடி சத்யராஜுக்கு மது வாங்கி கொடுத்து, அவர் மது போதையில் இருக்கும்போது அவரை வெட்டி கொலை செய்து, உடலை கார் ஒன்றில் எடுத்து சென்று புவனகிரி அருகே உள்ள மணல் பரப்பில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் வெளியே தெரிந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, தீபா, ஐயப்பன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த வினோத், அருண், கார்த்தி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ளக்காதல் காரணமாக கட்டிய கணவனை மனைவி கூலிப்படை மூலம் கொலை செய்துவிட்டு, காணாமல் போனதாக நாடகமாடிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement