தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்!மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்!மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!


Two people recovered from corona in tamilnadu

சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்து 323 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் 3 ஆயிரத்து 44 வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 277 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனவை தடுக்க சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய போரூரை சேர்ந்த இருவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் கொரோனா நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். அவர்களுக்கு நடத்தப்பட்ட இரண்டு சோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இருவருக்கும் சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டியுள்ளார்.