தமிழகம்

மதுபோதையில் தாய் கொலை முயற்சி.. அண்ணனை உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற தம்பி.. தாய்ப்பாசத்தால் 19 வயதில் சிறைவாசம்.!

Summary:

மதுபோதையில் தாய் கொலை முயற்சி.. அண்ணனை உருட்டுக்கட்டையால் அடித்தே கொன்ற தம்பி.. தாய்ப்பாசத்தால் 19 வயதில் சிறைவாசம்.!

தாயை தாக்கிய அண்ணனை கொலை செய்த வழக்கில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, நடராஜபுரம் தெருவில் வசித்து வருபவர் தங்கபாண்டி. இவரின் மனைவி ஆறுமுகத்தாய். தம்பதிகளுக்கு செல்லத்துரை (வயது 26), முத்துச்செல்வம் (வயது 19) உட்பட 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். தங்கபாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்துவிடவே, ஆறுமுகத்தாய் குடும்பத்தினை கவனித்து வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையாக இருந்த செல்லத்துரை, மதுபானம் அருந்திவிட்டு அவ்வப்போது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

நேற்று, செல்லத்துரை தாயிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்யவே, தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்து சென்ற செல்லத்துரை எப்படியோ பணம் தயார் செய்து குடித்துள்ளார். நள்ளிரவில் வீட்டிற்கு வந்த செல்லத்துரை போதையில் தாயிடம் தகராறு செய்யவே, ஆத்திரம் முற்றி தன்னை ஈன்றெடுத்த தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துச்செல்வம் அண்ணனை தடுக்க முற்பட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை முத்துச்செல்வம் மற்றும் ஆறுமுகத்தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். சம்பவத்தில், முத்துச்செல்வம் அண்ணனை உருட்டுக்கட்டையால் அடிக்க, செல்லத்துரை இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர், செல்லத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. முத்துச்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். 


Advertisement