இறப்பதற்கு முன் தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்துக்கொண்ட காதல் ஜோடி.! உடல் சிதறி பலியான சோகம்.!Thirupathur lovers commit suicide for parents not accepting love

காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்து உள்ள பூங்குளம் புதூரை சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகள் நந்தினி (22). குடியாத்தம் சாமரிஷி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் மகன் ராமதாஸ் (29). ராமதாஸ் பெங்களூருவில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நந்தினி கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.

இருவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலர்களாக மாறியுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழந்துவரும் நந்தினி, தனது நிலையை ராமதாஸிடம் எடுத்து கூற, அவரும் நந்தினியின் நிலையை புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்.

suicide

இந்நிலையில், இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர, இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆம்பூர் பகுதியில் சுற்றி திரிந்துள்ளனனர்.

இதனிடையே, நந்தினியை திருமணம் செய்துகொள்ளப் போவதாக தன் அக்காவுக்குப் போன் மூலம் ராமதாஸ் தகவல் சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன நிலையிலும் பெற்றோர்  எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளனர்.

சேர்ந்து வாழத்தான் முடியவில்லை, சேர்ந்து இறந்து போகலாம் என முடிவு செய்த அவர்கள், ஆம்பூர் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக்கொண்டனர். மேலும், இறப்பதற்கு முன் இருவரும் தங்கள் செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.

பின்னர், அந்த வழியாக சென்ற ரயில் மோதியதில் இருவரும் உடல் சிதறி உயிர் இழந்துள்ளனர். காதல் ஜோடி உடல் சிதறி உயிர் இழந்து கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து ஆம்பூர் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ஆம்பூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் கிடந்த செல்போனை சோதனை செய்ததில் காதலர்கள் இருவரும் கடைசியாக எடுத்துக்கொண்ட செல்பி பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.