நாட்டு மருந்து சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு... கதறும் குடும்பத்தினர்..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தைலாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்தி. இவருக்கு பத்து வயதில் ரோகித் என்ற மகன் உள்ளார். ரோகித் அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சிறுவனின் உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது.
இதனால் ரோகித்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் பெற்றோர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரோகித்துக்கு மஞ்சள்காமாலை இருப்பதாக சொல்லி இருக்கின்றனர். உடனடியாக ரோகித்தை பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே உள்ள கெங்கராம்பாளையத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் காந்திமதி என்பவரிடம் அழைத்து வந்து மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காலை நாட்டு மருந்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்ற சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி கதிர்காமம் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அன்று இரவே ரோகித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித்தின் பெற்றோர் நாட்டு மருந்து சாப்பிட்டதால் தான் தனது மகன் உயிரிழந்ததாகவும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.