கோயில் காளை பட பாணியில் சாலையோர கடைகளில் இளநீர் திருடி தனியாக கடை நடத்திய திருடன்.! வசமாக சிக்கிய பலே கில்லாடி

கோயில் காளை பட பாணியில் சாலையோர கடைகளில் இளநீர் திருடி தனியாக கடை நடத்திய திருடன்.! வசமாக சிக்கிய பலே கில்லாடி



tender coocanet theft

சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையின் ஓரமாக பல இளநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் லிங்கம் என்பவருக்குச் சொந்தமான இளநீர் கடையும் உள்ளது. இந்தநிலையில் லிங்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 30ஆம் தேதி லாரி மூலம் கொண்டு வரும் இளநீர் காய்களை வாங்கி தன் கடையின் அருகில் சுவற்றின் ஓரமாக தார்ப்பாய் மூலம் மூடி வைத்து சென்றதாகவும்.

வழக்கம் போல் மீண்டும் மறுநாள் கடையை திறக்கும் போது இளநீர் காய்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 50க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் திருடி சென்றது தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக போலிஸார் நடத்திய விசாரணையில் இதேபோன்று அப்பகுதியில் உள்ள இளநீர் கடைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இளநீர் காய்கள் மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அதே திருடன் மற்றொரு நாள் நள்ளிரவில் மீண்டும் லிங்கத்தின் இளநீர் கடைக்கு திருட வந்த போது பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பிடிபட்டவர் பெயர் ரஜினிகாந்த் என்பது தெரியவந்தது.

மேலும், இவர் கேகே நகர் பகுதியில் இருந்த இளநீர் குலைகளை திருடி கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து லிங்கம் அளித்துள்ள புகாரின் பேரில் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.