சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
திரைப்படத்தை மிஞ்சும் சுவாரசியம்..! ஓடும் ரயிலில் கொள்ளையடித்தது எப்படி; போலீசார் கொள்ளையர்களை கைது செய்தது எப்படி?
2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனை அறிந்த கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கடந்த 2 வருடங்களாக இந்த கொள்ளை சம்பவத்தை பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
ஓடும் ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது என்ற சுவாரசியமான தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் இதோ:
சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பணம் எடுத்துச்செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இந்த ரெயிலில் கொள்ளையை அரங்கேற்ற நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தோம். இதற்காக சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தோம். இதற்காக சேலம் ரெயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பல நாட்கள் வேவு பார்த்து வந்தோம்.

சேலத்தில் இருந்து ரெயில் எப்போது புறப்படுகிறது? எந்தெந்த நிலையங்களில் நிற்கிறது? எவ்வளவு நேரம் நிற்கிறது? எப்போது சென்னை வருகிறது? பெரிய பெரிய பார்சல்களை ரெயில்வே சரக்கு போக்குவரத்து அதிகாரிகள் எப்படி கையாளுகிறார்கள்? இதையெல்லாம் நீண்ட நாட்களாக கண்காணித்தோம்.
ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே டீ குடித்துக்கொண்டும், நாளிதழ் படித்துக்கொண்டும் கண்காணித்தோம்.

இந்தநிலையில் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடிக்கணக்கான அளவில் பணம் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்படுவதை அறிந்தோம். மின்சார ரயில் ஆன சேலம் எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து விழுப்புரம் வரை டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்படும் என்பதை அறிந்துகொண்டோம். எனவே அந்த இடைவெளியில் கொள்ளையடிப்பது தான் சரியான இடம் என்பதை தெரிவு செய்தோம். அதன்படி சேலத்தில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்ட ரயிலில் எங்கள் தலைவன் மோஹர்சிங் தலைமையில் 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் ரெயிலின் மேற்கூரைக்கு செல்லும்வகையில் பெட்டியின் படிக்கட்டு பகுதியிலேயே தயாராக இருந்தோம்.
ரெயில் புறப்பட்டதுமே திட்டத்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்குள் கூறிக்கொண்டோம். நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து மெதுவாக ரெயிலின் மேற்கூரைக்கு ஒவ்வொருவராக சென்றோம். இரவு வேளை என்பதாலும், ஏற்கனவே நோட்டமிட்டபடி சுரங்கப்பாதைகளோ, மரக்கிளைகளோ இல்லாத காரணத்தாலும், மின் மயமாக்கப்படாத பாதை என்பதாலும் எளிதாக ரெயிலின் மேற்கூரைக்கு சென்றோம்.

ஒருகட்டத்தில் நாங்கள் 5 பேரும் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் கூட்டாக அமர்ந்திருந்தோம். இந்தநிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சின்ன சேலம் கடந்து விருத்தாச்சலம் நோக்கி சென்றது. அப்போது தான் நாங்கள் திட்டமிட்டிருந்த படி மேற்கூரையில் துளை போட்டோம். எந்த சூழ்நிலையிலும் கண்காணிப்பு போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம். இதனால் ரெயில் என்ஜின் ஒலி எழுப்பும் சமயத்தில் குறிவைத்து வேகவேகமாக மேற்கூரையில் துளைபோட்டோம். ஓரளவு துளை போட்டதும் எங்களில் 2 பேர் அந்த துளையின்வழியாக ரெயில் பெட்டிக்குள் இறங்கினார்கள்.

அந்த 2 பேர் தான் ரெயில் பெட்டிக்குள் இருந்த மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்தனர். பின்னர் எடுத்த பணக்கட்டுகளை பத்திரமாக லுங்கியில் சுற்றி வைத்து கொண்டனர். தேவையான பணக்கட்டுகளை எடுத்த பின்னர் அவர்கள் 2 பேரும் வேகவேகமாக மேலேறி விட்டனர். நாங்களும் முன்பு போல ஜன்னல் கம்பிகள் வழியாக மெதுவாக கீழே இறங்கி, ரெயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம். ரெயில் விருத்தாசலம் வந்தபோது, அங்கே தண்டவாளம் அருகே காத்திருந்த எங்கள் கூட்டாளிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்.
பெரும் சிரமங்களுக்கு இடையே துல்லியமாக திட்டமிட்டு கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தை நினைத்து சந்தோஷப்பட்டோம். ஆனால் நாங்கள் கொள்ளையடித்தது செல்லாத, பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டோம். இருந்தாலும் எப்படியாவது இந்த பணத்தை மாற்றிவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தோம். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி சந்தோஷமாக செலவு செய்துவந்தோம்." என்று கூறியுள்ளனர்.
சிக்கியது எப்படி:
இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
சிபிசிஐடியின் தடயவியல் போலீஸார் பெட்டியை அங்குலம் அங்குலமாக சோதித்தனர். பெட்டியின் மேற்கூரை சதுரமாக கத்தரிக்கப்பட்டு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டப்பட்டு அதன் வழியாக ஆட்கள் நுழைந்து பணப்பெட்டிகளில் சிலவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.
சிபிசிஐடி போலீஸார் சேலத்திலிருந்து சென்னை வரும் 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர். சேலத்தில் பணம் ஏற்றப்படுவதற்கு முன்னரே ரயில் பெட்டியின் மேற்கூரையை துண்டித்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பணம் ஏற்றிய போது சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர் முருகேசன், பார்சல் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், போர்ட்டர்கள் என 34 ஊழியர்களிடம் சிபிசிஐடி தனிப்படையினர் விசாரணை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
ரயில் வரும் வழியெங்கும் உள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்ந்தனர். ஆனாலும் துப்பு துலக்க முடியவில்லை. மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வநதது.
மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையை பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது. ஆகவே டீசல் எஞ்சின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.

கொள்ளையர்கள் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் ஓராண்டு ஓடியது. சிபிசிஐடியில் அதிகாரிகள் மாறினர். அம்ரேஷ் புஜாரி புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது உத்தரவில் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்தது. சிபிசிஐடி போலீஸார் புது யுக்தி தோன்றியது.
அதன்படி இஸ்ரோ உதவியை நாடினர் . இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து உதவி கோரினர். குறிப்பிட்ட நாள் நேரம் குறித்து தகவல் கொடுத்து அதற்கான படங்களை கேட்டனர். இதன் மூலம் ரயில் குறிப்பாக எந்த இடத்தில் பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டது, எந்த இடத்தில் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது, எதில் கொண்டுபோகப்பட்டது என்பன உள்ளிட்ட துல்லியமான படங்களை பெற முடியும்.

இஸ்ரோ உதவியுடன் செயற்கை கோள் படம் கிடைத்தவுடன் போலீஸாருக்கு குறிப்பிட்ட இடத்தில் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பு கிடைத்தது. அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை சேகரித்தனர். இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட எண்கள் கிடைத்தன. அவைகளை ஆராய்ந்தபோது அவை மத்திய பிரதேசம், பிஹார் மாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்தது.
போலீஸார் நடத்திய விசாரணையில் மத்திய பிரதேச மாநில போலீஸார் மூலம் சில தகவல்களை சேகரிக்க முடிந்தது. அதில் மத்தியபிரதேசம் குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக்கூட்டத்தலைவனின் ஆட்கள் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையில் மோஹர்சிங்கின் கூட்டாளிகள் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட மத்திய பிரதேஷத்தை சேர்ந்த தினேஷ் (38), ரோஹன் பார்த்தி (29) இருவரும் சென்னைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை வந்தவர்களை நேற்றிரவு சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோஹர்சிங் தலைமையில் இக்குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
வாக்குமூலத்தில் கொள்ளையர்கள் கூறியபோது "நாங்கள் கொள்ளையை அரங்கேற்றிய நாளில் இருந்து அவ்வப்போது போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் எங்களுக்கு கிலியை ஏற்படுத்தினாலும், மாட்டிவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சுற்றி வந்தோம். ஆனால் எங்களின் கெட்ட நேரம் நாங்கள் சிக்கிவிட்டோம்." என்று புலம்புகின்றனர்.