வேலைக்கு செல்லாமல் நாள் முழுக்க சூதாட்டம்.. ரூ.15 லட்சத்தை இழந்த கூலித்தொழிலாளி தற்கொலை.!



Salem Man Dies by Suicide After Losing ₹15 Lakh in Online Gambling

சேலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம், கருக்கல்வாடி சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ்ராஜ் (வயது 28). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுகன்யா. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே பிரகாஷ்ராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

நாள் முழுக்க சூதாட்டம்:

இதனால் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சுகன்யா கணவரிடம் விசாரித்து ஆன்லைன் சூதாட்ட பழக்கத்தை கைவிடுமாறு கூறி வற்புறுத்தி இருக்கிறார். மேலும் ரூ.15 வரை இழந்தது போதும் அதற்குமேல் இழக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் மனைவியின் அறிவுரையை கேட்காத பிரகாஷ்ராஜ் வேலைக்கு செல்லாமல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

குடும்பத்தகராறு:

இதனால் தம்பதிகளுக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த பிரகாஷ்ராஜ் திடீரென வீட்டிற்கு சென்று உள்பக்கமாக தாழிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மனைவி சுகன்யா கதவை திறக்குமாறு கூறிய நிலையில், அவர் கதவை திறக்காததால் பதறியவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துள்ளார். 

Salem

இளைஞர் தற்கொலை:

இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த நிலையில் பிரகாஷ்ராஜ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த தாரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சூதாட்டத்தால் தொடரும் உயிரிழப்புகள்:

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக அடுத்தடுத்து பலரும் உயிரிழந்து வரும் நிலையில், திருமணமான ஒன்றரை வருடத்தில் நடந்துள்ள இந்த சோகம் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.