காற்றின் திசைவேக மாறுபாடு.! தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை!
காற்றின் திசைவேக மாறுபாடு.! தமிழகத்தில் கொட்டித்தீர்க்கவிருக்கும் கனமழை!

தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று சத்தீஷ்கர் மாநிலம் மற்றும் அதை ஒட்டிய நிலப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிக மழை பெய்யும் எனவும், தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று செப்டம்பர் 23 ஆம் தேதி இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.