மண்திருட்டால் சோகம்.. குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவன் பரிதாப பலி.. கண்ணீரில் பெற்றோர்கள்.!

மண்திருட்டால் சோகம்.. குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவன் பரிதாப பலி.. கண்ணீரில் பெற்றோர்கள்.!



pudukkottai-kadamangudi-child-died-lake

வண்டல் மண்ணுக்காக தோண்டப்பட்ட குளத்தின் பள்ளத்தில் விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடம்பக்குடி, அஹ்ரகாரம் பகுதியில் வசித்து வருபவர் பால செந்தில். இவரின் மகன் சந்தோஷ் (வயது 13). இவர் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று மாலை நேரத்தில் பொத்தேரி குலத்திற்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். 

அந்த குளத்தில் குழிதோண்டி வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே பள்ளம் இருந்துள்ளது. இதனால் சிறுவனுக்கு பள்ளம் தெரியாத நிலையில், ஆழமான இடத்தில் திடீரென கீழே விழுந்த சந்தோஷ், பள்ளத்தில் மூழ்கி தத்தளித்துள்ளான்.

pudukkottai

இதனைக்கண்ட இளைஞர்கள் சந்தோஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிறுவன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், "குளங்களில் பலரும் வண்டல் மண்ணை திருட்டுத்தனமாக சுரண்டுகிறார்கள். இதனால் பள்ளங்கள் ஏற்படுகிறது. சிறுவர்கள் மழை நேரங்களில் வரும் தண்ணீரை எண்ணி குளிக்க செல்கிறார்கள். பள்ளங்கள் அவர்களுக்கு தெரியாமல் சோகம் நிகழ்கிறது" என்று தெரிவித்தனர்.