
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழ
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பிரதீப்(30). இவரது மனைவி வனிதா(26). நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை கடந்த 22-ஆம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து வனிதா தனது உறவினர்களுடன் மருத்துவமனையில் தங்கினார். இந்த நிலையில் பணியில் இருந்த செவிலியர் வனிதாவுக்கு தவறான ஊசி ஒன்றை போட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊசி போடப்பட்ட சில மணி நேரத்திலேயே நன்றாக இருந்த வனிதா மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதையறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வனிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
வனிதாவின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டி அவரது உடலை உறவினர்கள் வாங்காமல், மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் காவல்நிலையத்துக்கு வந்த உறவினர்கள் மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement