புதுமாப்பிள்ளை தற்கொலை: வக்கீல், போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு!.. கலெக்டர் ஆபீஸில் கதறிய தாயார்..!
புதுமாப்பிள்ளை தற்கொலை: வக்கீல், போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு!.. கலெக்டர் ஆபீஸில் கதறிய தாயார்..!

நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதியில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கு காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 பேரே காரணம் என்று கூறி அவருடைய தாயார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். பூதப்பாண்டி மேலரத வீதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகன் வினிஷ் (30). இவருக்கும், இவரது உறவினர் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க நாள் குறிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் வினிஷின் தாயார் உஷா நேற்று தன் உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிஷிக்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரும், பூதப்பாண்டி காவல் நிலைய அதிகாரிகள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை காவல் நிலையம் வரவழைத்து மிரட்டி உள்ளனர். அவனது தொழிலை விட்டுவிட்டு ஊரில் இருந்து ஓடிவிட வேண்டும் என்று கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இரவு 12. 30 மணி வரை காவல் நிலையத்தில் இருந்து எனது மகனை ஒழித்து கட்டுவது குறித்து காவல் நிலைய அதிகாரிகளுடன் சதித்திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி வினிஷ் மீது பொய் வழக்கு போட்டு 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சம்மந்தப்பட்ட 3 பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து வினிஷ் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் காலை மற்றும் மாலையில் கையெழுத்து போட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி கையெழுத்து போட்டு விட்டு வரும் வழியில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து வினிஷை மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு எனது மகன் தற்கொலை செய்துள்ளான். எனவே தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.