மூலிகை பெட்ரோல் விஞ்ஞானி ராமர் பிள்ளையின் மரண வாக்குமூலம்! வைரலாகும் பகீர் வீடியோ



organic petrol scientist ramar pillai

கடந்த 1996ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியவர் ராமர் பிள்ளை. அதற்கான கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் யாரும் ஏற்கவில்லை. மேலும், பெட்ரோலில் கலப்படம் செய்து தனது கண்டுபிடிப்பை மூலிகை எரிபொருள் என்று பெயர் மாற்றம் செய்து விற்பனையில் இறங்கியதாக் கூறி ராமர் பிள்ளை உள்பட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. 

அதோடு, மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாகக் கூறி ரூ.2.27 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 

தன்னுடைய மூலிகை பெட்ரோலை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று கூறிய ராமர் பிள்ளை, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கினார். ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பிரதமர் மோடிக்கும் ராமர் பிள்ளையின் "கருணை மனு" (மரண வாக்குமூலம்) என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூலிகை பெட்ரோல் திட்டவரைவை பிரதமர் பார்வையிட்டார். அதனை முழுமைப்படுத்தக் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றக்கூடாது என பல சதிகள் நடந்துள்ளன.

ramar pillai

என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன். 10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்முலாவை சமர்ப்பிக்க வேண்டும். 

ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன். அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள். நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள். நான் தயாராக இருக்கிறேன். நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.

ramar pillai

வரும் 10 தேதிக்குள் இதனை நீங்கள் செய்ய வேண்டும். இல்லை என்றால் நான் மறைந்துவிட்டேன் என்று செய்திதான் உங்கள் காதுகளுக்கு எட்டும். இதை நான் மரணத்தில் விளிம்பில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.