இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
மின்பழுதை நீக்க ட்ரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி மின்சாரம் பாய்ந்து உடல்கருகி பலி.!

மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய விவசாயி பரிதாபமாக மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, தும்மனட்டி கெந்தோரை கிராமத்தை சார்ந்தவர் இராமகிருஷ்ணன் (வயது 55). இவர் விவசாயி ஆவார். மின்சாரம் பழுதுபார்க்கும் பணிகளும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் கெந்தோரை கிராமத்தில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மின்வாரிய பணியாளர்கள் பழுது பார்க்க வர தாமதம் ஆகலாம் என்பதால், மின்தடையை தானாக சரி செய்ய இராமகிருஷ்ணன் முயற்சித்துள்ளார்.
அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய நிலையில், திடீரென மின் விநியோகம் சீராகி மின்சாரம் வந்துள்ளது. இதனால் இராமகிருஷ்ணன் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஊட்டி காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் இராமகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், மக்கள் மின்வாரிய ஊழியர்கள் இல்லாமல் சுயமாக மின் பழுது பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.