புதிய ரேஷன் கார்டு இந்திய குடிமகன் அல்லாதவர்களுக்கு வழங்க கூடாது... உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு...!!
ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காதவர்களை வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம், நேரிடையாக வங்கிக்கு சென்று இணைக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமனன் கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைகள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் நியாய விலைக்கடைகளில் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது.
நியாய விலைக்கடைகளை சரியாக காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காதவர்களை வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகளை வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
இந்திய குடிமகனாக இல்லாத யாருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது. நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மாநில ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு தனித்தனியாக பில் போடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரே நபர் தமிழ் நாட்டிலும் வெளி மாநிலங்களிலும், குடும்ப அட்டை வைத்திருந்து, பொருட்களை வாங்குபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.