நீட் தேர்வு எழுதிவிட்டு சென்ற மாற்றுத்திறனாளி மாணவி மரணம்! இயற்கைக்கு மாறான மரணத்தால் மாணவியின் தந்தை அதிர்ச்சி!

நீட் தேர்வு எழுதிவிட்டு சென்ற மாற்றுத்திறனாளி மாணவி மரணம்! இயற்கைக்கு மாறான மரணத்தால் மாணவியின் தந்தை அதிர்ச்சி!



neet-exam-student-suddenly-died

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதி தேர்வான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பாப்பணம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா. மாற்றுத்திறனாளி மாணவியான சந்தியா நீட் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் மதுரைக்கு வந்துள்ளார். தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நீட் நுழைவுத்தேர்வை எழுதிவிட்டு, தனது தந்தையுடன் பேருந்தில் ஊர் திரும்பியுள்ளார். 

டாக்டர் கனவுடன் தந்தையுடன் அவர் மதுரையில் இருந்து அரசு பேருந்தில் சென்ற சந்தியா சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சென்ற போது திடீரென மயங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த முனியசாமி சக பயணிகள் உதவியுடன் மகளை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

NEET exam

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி சந்தியா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் நிலை குலைந்துபோன முனியசாமி கதறி அழுதார்.

மாணவி சந்தியாவின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என மனைவியின் தந்தையால் புகார் அளிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாணவியின் உயிரிழப்பு பாப்பனம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாப்பனம் கிராமத்தில் இருந்து நீட் தோ்வு எழுத சென்ற முதல் பெண் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.