அடக்கடவுளே..! காதணி விழா முடிந்து ஊர் திரும்பியபோது கடுப்பாட்டை இழந்து வேப்ப மரத்தில் மோதிய ஆம்னி வேன்! 8 பேர் துடிதுடித்து பலி... திருச்சி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!
திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஆம்னி வேன் வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பயணித்த வேன், ஜெம்புநாதபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக ஆம்னி வேனில் சென்றனர். விழா முடிந்து மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே சென்றபோது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் அதிவேகமாக மோதியதில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.