தமிழகம் Covid-19

மக்களே ப்ளீஸ் இப்டி பண்ணிடாதீங்க..! உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.! முதல்வர் மு.க.ஸ்டாலின்

Summary:

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் தான் கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா 2வது அலை மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள் என கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்'' என பேசியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட வீடியோவில் கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களை காக்கின்ற பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

எனவேதான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது லேசாக பரவத்தொடங்குகிறது. இதை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். கடைகளுக்கு முககவசம் அணியாமல் செல்லுதல், கூட்டமாக கூடுதல், நெரிசலாக நிற்பது, இதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனையைத்தான் தருகிறது.

எனவேதான் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். சென்னையில் அப்படி பல பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மட்டுமே, கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை உணராமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடந்துக்கொள்ளக்கூடாது. கூட்டமாக கூடுவதின் மூலமாக கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது என்று, மீண்டும், மீண்டும் உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக்கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
 


Advertisement