அரசியல் தமிழகம்

மு.க.ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது.! மு.க.அழகிரி ஓப்பன் டாக்.! திக்குமுக்காடிய திமுக.!

Summary:

மு.க.ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது எனமு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை. இந்தநிலையில்  மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தநிலையில், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி  தனது ஆதரவாளா்களுடன்  இன்று ஆலோசனை நடத்தினார்.

மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள ஒரு தனியார் பேலசில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய மு.க.அழகிரி, எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக்கினேன். கலைஞரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். சதிகாரர்களையும், துரோகிகளையும் எதிர்ப்பதற்கான முதல்படிக்கட்டு இந்தக் கூட்டம் என தெரிவித்தார்.

திருமங்கலம் தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒருவருக்கும் பணம் தரவில்லை. கருணாநிதியின் உழைப்புதான் திருமங்கலம் தொகுதி வெற்றிக்கு காரணம்.கலைஞர் தொடர்ந்து கேட்டுக் கொள்ளவே, திருமங்கலம் தேர்தலில் நாம் பணியாற்றி 40,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம். பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் இருந்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன், ஆனால் வலுக்கட்டாயமாக கலைஞர் எனக்கு கொடுத்தார்.

ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை கலைஞரிடம் இருந்து பெற்றுத் தந்தேன். மு.க.ஸ்டாலின் எனக்கு ஏன் துரோகம் செய்தார் எனத் தெரியவில்லை. ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது. எனது தொண்டர்கள் விடவேமாட்டார்கள். விரைவில் எனது முடிவை அறிவிப்பேன். அது நல்ல முடிவாக இருந்தாலும், கெட்ட முடிவாக இருந்தாலும் அதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மு.க.அழகிரியின் பேச்சால் திமுகவினர் குழப்பத்தில் உள்ளனர்.


Advertisement