சென்னையில் சுரங்கப்பாதையில் பழுதாகி நின்ற மெட்ரோ ரெயில்: கால தாமதமானதால் பயணிகள் அவதி !!

சென்னையில் சுரங்கப்பாதையில் பழுதாகி நின்ற மெட்ரோ ரெயில்: கால தாமதமானதால் பயணிகள் அவதி !!


Metro stopped in subway

சென்னையில் சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயில் திடீரென பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தை பிடிக்க கால தாமதமானதால் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

சென்னை சென்டிரலில் இருந்து விமான நிலையத்திற்கு சுரங்கப்பாதையில் மே 25-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.55 மணிக்கு சென்டிரலில் இருந்து பரங்கிமலைக்கு மெட்ரோ ரெயில் ஒன்று புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50-க்கும் குறைவான பயணிகளே அதில் இருந்தனர். 4.58 மணிக்கு அந்த ரெயில் கீழ்ப்பாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்தது.

30 வினாடிகள் அங்கு நின்ற ரெயில் மீண்டும் புறப்பட தயாரானது. ரெயில் கதவுகள் மூடப்பட்ட பின்னரும் ரெயில் புறப்படாமலேயே நின்றது. பைலட் ரெயிலை இயக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து 2 நிமிடங்கள் ரெயில் அங்கேயே நின்றது. இதை கோயம்பேடு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கவனித்த அதிகாரிகள் வாக்கி-டாக்கி மூலம் பைலட்டுடன் பேசினார்கள்.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், பிரச்சினையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பைலட் தெரிவித்தார். ரெயிலில் இருந்த பயணிகளும் ரெயில் நீண்ட நேரம் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பின்னால் சென்டிரலில் இருந்து அடுத்த மெட்ரோ ரெயில் வந்தது. மாலை 5.03 மணிக்கு கீழ்ப்பாக்கம் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் நெருங்கியது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் 2 ரெயில் பைலட்டுகளுடனும் பேசி சில உத்தரவுகளை பிறப்பித்தனர். பழுதான ரெயிலில் இருந்த பைலட் ஒலிபெருக்கி மூலம், ரெயில் பழுதாகியிருப்பதால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கும்படி கூறினார். உடனே கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் கீழ்ப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறங்கினார்கள்.

பின்னால் வந்த மெட்ரோ ரெயில் பழுதாகி நின்ற ரெயிலை சிறிது தூரம் மெதுவாக தள்ளிச்சென்று நிறுத்தியது. பின்னர் அந்த மெட்ரோ ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் அதேபோல் இறக்கிவிடப்பட்டனர். பயணிகள் என்னவென்று புரியாமல் அதிர்ச்சியில் இறங்கினார்கள். பழுதான ரெயிலை தள்ளிக்கொண்டே இரு ரெயில்களும் கோயம்பேடு நோக்கி சென்றன.

2 ரெயில்களிலும் இருந்து இறங்கிய பயணிகள் ஒன்றும் புரியாமல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் செல்லும் சில பயணிகள், விமானத்தை பிடிக்க நேரமாகிவிட்டதாக முறையிட்டனர். இதனால் கீழ்ப்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஒரே கூச்சலாக இருந்தது.

அதன்பிறகு ரெயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், உங்களுக்கு விரைவாக ரெயில் வசதி செய்துதரப்படும். அதுவரை பொறுமையாக இருக்கும்படியும், அவசரமாக செல்ல விரும்புபவர்கள் டிக்கெட்டை கொடுத்தால் முழு கட்டணமும் திருப்பித்தரப்படும் என்றும் அறிவித்தனர். இதனால் சிலர் கட்டணத்தை பெற்றுக்கொண்டு வெளியே சென்றனர்.

இந்த நேரத்தில் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் விமான நிலையத்தில் இருந்து நேரு பூங்கா நோக்கி ஒரு மெட்ரோ ரெயில் வந்தது. இந்த ரெயிலில் உள்ள பயணிகள் அனைவரும் கீழ்ப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டார்கள். விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அந்த ரெயிலில் ஏற்றப்பட்டதும், அந்த ரெயில் வந்த வழியாகவே செனாய் நகர் நோக்கி புறப்பட்டது. அப்போது, எதிரே எந்த ரெயிலும் வராதபடி கோயம்பேட்டிலேயே நிறுத்திவைக்கப்பட்டன.

அந்த ரெயில் செனாய் நகர் வந்ததும், மாற்றுப்பாதை வழியாக சென்டிரல் - விமான நிலைய வழித்தடத்திற்கு மாறி வழக்கமான பாதையில் சென்றது. அதன்பின்னரே கோயம்பேட்டில் இருந்து சென்டிரல் நோக்கி ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கீழ்ப்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகளையும் ஏற்றிக்கொண்டு சென்டிரல் நோக்கி புறப்பட்டது.

chennai

ஒரு வழியாக ½ மணி நேரத்துக்கு பிறகு மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரானது. 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. பழுதான ரெயில் கோயம்பேடு பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் பழுதாகி நின்ற சம்பவம் இதுவே முதல் முறையாகும். நல்லவேளையாக ரெயில் நிலையத்திலேயே ரெயில் பழுதானதால் பயணிகளை இறக்கிவிட வசதியாக இருந்தது.

சுரங்கப்பாதையின் நடுவழியில் பழுது ஏற்பட்டிருந்தால், பயணிகளை அங்கேயே இறக்கி அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சுரங்கப்பாதை வழியாக நடத்தியே கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.