தமிழகம்

மகனின் படிப்புக்காக வளர்த்த 2 கன்றுக்குட்டிகளை விற்று மாற்றுத்திறனாளி நபர் செய்த காரியம்! குவியும் பாராட்டுக்கள்!!

Summary:

தஞ்சையை அடுத்த ஆழிவாய்க்கால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மகேஸ்வ

தஞ்சையை அடுத்த ஆழிவாய்க்கால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு பிரசாந்த், சஞ்சய் என இரு மகன்கள் உள்ளனர். பிரஷாந்த் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் சஞ்சய் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். பிஎஸ்சி பிஎட் முடித்தநிலையில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரனுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென கண்பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதனால் அவர் வேலையை விட்டு விட்டார்.

பின்னர் 100 நாட்கள் வேலைத்திட்டம், மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை ரூ.1000 என சொற்ப வருமானத்தில் பொருளாதார நெருக்கடியிலேயே வாழ்ந்து வந்துள்ளார். அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன்னைப் போல கஷ்டப்படும் பலருக்கும் உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மகன் சஞ்சய் படித்து முடித்தால் அவரை கல்லூரியில் சேர்க்க தேவைப்படும் என்று தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் 2 கன்றுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வரும்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சிறிதும் யோசிக்காமல் தனது மகனின் படிப்புக்காக வாங்கிய இரண்டு கன்றுக்குட்டிகளையும் விற்று அதன் மூலம் கிடைத்த 6 ஆயிரத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து வழங்கியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனின் செயலை பாராட்டியுள்ளார்.
 


Advertisement