தமிழகம்

காலைக்கடன் முடிக்க சென்ற இடத்தில் உடம்பில் பாய்ந்த மின்சாரம்! காப்பாற்ற முயன்ற நாய்! இறுதியில் நேர்ந்த துயரம்!

Summary:

Man and dog died in electric shock

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ள மழையூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவர் லோடுமேனாக கூலித்தொழில் செய்துவந்துள்ளார். இவர் இன்று அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார்.  நேற்று இரவு அப்பகுதியில் மழை பெய்த காரணத்தினால் மின்கம்பி அறுந்து வயலில் கீழே கிடந்துள்ளது. 

மின்கம்பி கீழே அறுந்து கிடப்பதை அறியாத கருப்பன் மின் கம்பியில் கால்களை வைத்துள்ளார். அவர்மீது மின்சாரம் பாய்ந்ததால் துடித்தபடி அலறல் சத்தம் போட்டுள்ளார். அப்போது அவருடன் வந்த நாய் அவரை காப்பற்ற முயற்சித்து, அவரின் ஆடையை கடித்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளது. ஆனால் நாய் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பன் மற்றும் அவர் வளர்த்த பாசமுள்ள நாய் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனையடுத்து அவ்வழியாக வந்த நபர்கள் கருப்பன் மற்றும் அவரது நாய் மின்கம்பியின் அருகே இறந்து கிடப்பதை பார்த்து, மின்வாரிய ஊழியர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மின்சாரம் அணைத்துவைக்கப்பட்டு கருப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 


Advertisement