'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்- தமிழக முதல்வர்!!M K Stalin wished to Scientist Veeramuthuvel

ந்திரனில் ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்தது. முன்னதாக அனுப்பப்பட்ட சந்திராயன் 2 தோல்வி அடைந்ததால் அதில் என்னென்ன சிக்கல்கள் இருந்தது என்ன தவறு ஏற்பட்டது என்பதை நன்கு ஆராய்ந்து கண்டுபிடித்து மீண்டும் அந்த சிக்கல் ஏற்படாத வகையில் இந்த சந்திராயன் 3 விண்கலமானது தயாரிக்கப்பட்டது.

இதனால் சந்திராயன் 3 உறுதியாக இம்முறை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு, நேற்று வெற்றியும் அடைந்துள்ளது. இதனால் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.

மேலும் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா பக்கம் திருப்பி அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த வெற்றியானது இருந்துள்ளது. இதனால் பல தரப்பினரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று இந்திய பிரதமர் மோடி அவர்களும் இஸ்ரோ குழுவினரோடு சேர்ந்து காணொளியில் இந்த வெற்றியை தேசியக்கொடி அசைத்து கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் அவரது பாராட்டுகளை தொலைபேசி மூலம் விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சியை முதலமைச்சர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம் என்று பகிர்ந்துள்ளார்.