தமிழகம் ஆன்மிகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீப திருவிழா.! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்.!

Summary:

தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகா தீப பெருவிழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப நிகழ்ச்சியில் பங்கேற்கவும், மலையேறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

அங்கு நடக்கும் நிகழ்ச்சியை, யூ-டியூப், கோயில் இணையதளம், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement