கள்ளக்குறிச்சி கலவரம்... நக்கீரன் செய்தியாளர்கள் மீது பள்ளி மேலாளரின் தம்பி தாக்குதல்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ.!

சக்தி இன்டெர்ன்ஷ்னல் பள்ளியில் நடந்த மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி இன்டர்நெஷனல் பள்ளியில் பயின்று வந்த கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த 17 வயது மாணவி, பள்ளி விடுதி வளாகத்தில் மேல் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் மாணவிக்கு நீதி வேண்டும் என மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் கலவரத்தில் நிறைவடைந்து பள்ளி சூறையாடப்பட்டது.
இந்த கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் படிப்படியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கலவரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. பல்வேறு செய்தி நிறுவனங்களும் மக்களுக்கு உண்மையை கொண்டு சேர்க்க முடிவு செய்து, கனியாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்படி விஷயம் தொடர்பாக நக்கீரன் செய்தி நிறுவனத்தில் இருந்து தலைமை செய்தியாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜீத் குமார் ஆகியோர் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அந்த சமயத்தில், பள்ளியின் தாளாளரான ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ் உட்பட அவரின் ஆதரவு நபர்கள் 10 பேர் சேர்ந்து சாலையில் செய்தியாளர்களின் காரை இடைமறித்து தாக்கியுள்ளனர்.
இதனால் பதறிப்போன செய்தியாளர்கள் தங்களின் வாகனத்தை சேலம் நோக்கி இயக்க, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் தலைவாசல் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் செய்தியாளர்களை மீட்டு காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆத்தூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.