மகள் வீட்டிற்கு போய் வருவதற்குள் இப்படி ஆச்சே... பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றிநகரை சேர்ந்தவர் ஜாபர் அலி(56). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக ஊர் திரும்பியுள்ளார். ஜாபர் அலி வீட்டில் இன்டர்நெட் சேவை இல்லாததால் சிதம்பரம் வடக்கு ரத வீதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். பூட்டிய வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஜாபர் அலிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே வீட்டிற்கு வந்த ஜாபர் அலிக்கு பீரோவில் இருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து துப்புதுலக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.