மனைவி மற்றும் மகளை கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற ஐடி இன்ஜினியர்... நடந்தது என்ன.?காவல்துறை விசாரணை.!

சென்னையை அடுத்த தாழம்பூரில் ஐடி நிறுவன ஊழியர் தனது மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் அரவிந்த்(35). இவர் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணமாகி சுஜிதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா என்ற ஏழு வயது மகளும் இருந்தனர். குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் மனைவி சுஜிதா வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த தம்பதியினர் நாவலூரை அடுத்த தாழம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் ஒன்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி இருக்கின்றனர். வீட்டிற்காக வாங்கிய கடனை ஒருவரது வருமானத்தில் அடைக்க முடியாமல் திணறி வந்துள்ளனர் இதனால் கடும் மன உளைச்சலை சந்தித்திருக்கிறார் அரவிந்த்.
இந்நிலையில் நேற்று காலை தாழம்பூர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு அரவிந்த் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டதாகவும் தானும் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் கூறிய முகவரிக்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் படுக்கையறையில் சடலமாக கிடந்த ஐஸ்வர்யா மற்றும் சுஜிதா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அரவிந்தை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.