சென்னையை கலக்கிய போலி ஐபிஎஸ் அதிகாரி சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம்!!

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகன் சிவநேசன் (25). பட்டப்படிப்பு முடித்துள்ள சிவநேசன், சென்னை பல்கலைக்கழகத்தில் குற்றவியல் தொடர்பாக படித்துள்ளார்.
இவர் ஒரு சைரன் வைத்த காரில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி பலரை ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் அதே வண்டியில் கஞ்சா பொட்டலங்களையும் கடத்தியள்ளார்.
இந்நிலையில் அவர் சென்னை அபிராமபுரத்தில் நடத்த குடும்ப தகராறில் தலையிட்ட போது உண்மையான போலிசாரை மிரட்டி சிக்கி கொண்டார்.
சென்னை ஆர்.ஏ.புரம் கேசவ பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜூனத் பேகம். இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில், இவரது கணவர் சகோதரரின் 2–வது மனைவி சஹானா வசித்து வருகிறார். இந்த வீடு தொடர்பாக ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் நடந்துள்ளது. இந்த பிரச்சினை பற்றி போலீஸ் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூனத் பேகத்துக்கும், சஹானாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார் ஒரு பெண் போலீஸை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் அங்கு விசாரணை நடத்தி கொண்டிருந்த போது சிவநேசன் போலீஸ் என ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டிருந்த சைரன் வைத்த காரில் வந்து இறங்கியுள்ளார்.
தன்னை ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்று அவர்களிடம் அறிமுகப்படுத்திய சிவநேசன் பெண் போலீசிடம் நீங்கள் காவல் நிலையத்திற்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து காவல் நிலையம் சென்ற பெண் போலீஸ், நடந்தவற்றை இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம் தெரிவித்தார்.
பின்னர் சஹானாவும், அந்த வாலிபரும் அதே காரில் அபிராமபுரம காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் அஜிகுமாரிடம், சிவநேசன் தான் ஒரு இன்டர்போல் துணை கமிஷனர் என்றும், ஏ.டி.ஜி.பி. ஒருவரின் பெயரை கூறிஅவர் தனக்கு தெரிந்தவர், அவருடன் தான் வேலை பார்த்ததாகவும் அதிகார தோரணையில் கூறியுள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர், அடையாள அட்டை மற்றும் பணி தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். இதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் நடத்திய விசாரணையில் அவர் போலியாக தன்னை ஐபிஎஸ் அதிகாரி என்று கூறியது உறுதியானது.
இதையடுத்து போலீசார் அவரது சைரன் வைத்த கார் மற்றும் அதில் இருந்த 6 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்த போலிசார் அவர் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.