திடீரென வெடித்து சிதறிய பட்டாசு ஆலை! 8 பேர் பரிதாபமாக பலி! பலர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சிப்பிபாறையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த பட்டாசு ஆலையில், நேற்று மதியம் எதிர் பாராதவிதமாக பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து அங்கு ஏற்பட்ட வெடி விபத்ததில், இரண்டு அறைகள் தரைமட்டமாகின.
அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த 6 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.