25 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி; அவர் கூறிய காரணத்தால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்!!farmer-killed-peacocks-by-poisoning

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அடிக்கடி மயில்கள் இறந்து கிடப்பதாக மக்கள் சில நாட்களுக்கு முன்பு வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதைப் பற்றி அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனை தொடர்ந்து மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளிகளில் ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனை கண்டா அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் அந்த பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கிடைத்த தகவலால் அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

peacocks killed by farmer

இந்த விசாணையின் மூலம், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 50) என்ற விவசாயி மயில்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் விசாரணையில், சந்திரன் அந்த பகுதியில் குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவர் விவசாயம் செய்து வந்த நிலத்தில் மயில்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் மிகுந்த வேதனையடைந்த விவசாயி இதனை எப்படி சமாளிப்பது என்று யோசித்துள்ளார். 

பின்னர் அவர் நெல்லில் குருணை மருந்தை கலந்து அந்த வயல் பகுதியில் வைத்துள்ளார். இந்த விஷம் கலந்த நெல்லை தின்ற மயில்கள் அநியாயமாய் உயிரைவிட்டுள்ளன. இவ்வாறு கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாகவே மயில்கள் அடிக்கடி இறந்து கிடப்பதை வனத்துறையிடம் தெரிவித்தும் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. வனத்துறையினரின் அலட்சியப்போக்கால் தான் இத்தனை மயில்கள் இறந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.