நான் ஐஏஎஸ் அதிகாரி என விசிட்டிங் கார்டை கொடுத்து பந்தா காட்டி வசமாக சிக்கிய போலி ஐஏஎஸ்.!



fake IAS arrested

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். 27 வயது நிரம்பிய இவர், கடந்த 1 ஆம் தேதி மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தொடர்புகொண்டு, நான் ஐஏஎஸ் அதிகாரி என கூறி, நூம்பல் பகுதியில் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது தனது கார்மீது அந்த வழியாக வந்த பைக் மோதியது. இதையடுத்து பைக்கில் வந்த 4 பேர் தன்னிடம் வம்பு இழுத்தாக  புகார் அளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் புகார் தெரிவித்த சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த விசிட்டிங் கார்டில் ஊரக வளர்ச்சித் துறை இணை செயலாளர் என்று போடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுபாஷ் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் சுபாஷ் மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி என்பது தெரியவந்தது. டிப்ளமோ மட்டும் முடித்த அவர் ஐஏஎஸ் அதிகாரி என கூறி பலரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.