செய்வினை எடுக்க சுடுகாட்டில் பூஜை.. பெண்கள் தான் டார்கெட்.. குடுகுடுப்புகாரர் பகீர் செயல்.!



Fake Black Magic Scam in Chennai: Woman Cheated of Cash and Gold in Thiruvanmiyur

சென்னையில் மாந்திரீகம், செய்வினை என பயமுறுத்தி தனியாக இருந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வாங்கிய குடுகுடுப்புகாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள திருவான்மியூர் மேட்டு தெரு பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு (வயது 40). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக காலை 10 மணி அளவில் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 50 வயதுடைய குடுகுடுப்புகாரர் ஒருவர் மஞ்சுவிடம் உங்களது வீட்டுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

குடும்பத்திற்கு செய்வினை:

மேலும் குடும்பத்துக்கு ஒருவர் செய்வினை வைத்துள்ளதாகவும், இதனால் கணவர் மற்றும் குழந்தைகளின் உயிர் ஆபத்து இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்த மஞ்சு குடுகுடுப்புக்காரரிடம் பேசிய போது மாந்திரீகம் மற்றும் செய்வினையை எடுத்து விடுவதாக கூறி இருக்கிறார். அதற்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

செய்வினை

சுடுகாட்டில் பூஜை:

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என பெண்மணி கூறிய நிலையில், ஒரு கயிறை மஞ்சுவின் கையில் கட்டி விட்டு ரூ.20,000 பணத்தை கேட்டுள்ளார். ரூ.20,000 பணம் இல்லாததால் தன்னிடம் இருந்த ரூ.10,000 ஐ கொடுத்துள்ளார். மேலும் நகைகள் வேண்டும் என கேட்டபோது வளையல், காதணி என 4 சவரன் நகையை கொடுத்துள்ளார். சுடுகாட்டில் இதனை வைத்து பூஜை செய்து பின் மீண்டும் தருவதாக கூறிய குடுகுடுப்புகாரர் மீண்டும் வரவில்லை. 

தனியாக இருக்கும் பெண்கள் டார்கெட்:

இதனை வீட்டுக்கு வந்த கணவரிடம் பெண்மணி தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த குடுகுடுப்புக்காரரான பாலமுருகன் (வயது 50) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சென்னை பகுதியில் தங்கியிருந்து தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து இது போன்ற கைவரிசை காண்பித்ததும் தெரியவந்துள்ளது.