தமிழகம்

வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்க கல்குவாரியில் தலைகீழாக குதித்து ஆனந்த குளியல்.. கல்லூரி மாணவன் பரிதாப பலி.!

Summary:

வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்க கல்குவாரியில் தலைகீழாக குதித்து ஆனந்த குளியல்.. கல்லூரி மாணவன் பரிதாப பலி.!

கல்லூரி மாணவர் வாட்சப் - ஸ்டேட்டஸ் வைப்பதற்காக, மலை உச்சியிலிருந்து கீழே குதித்தபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டையில் அக்கட்சியாகுளம் பகுதியில் வசித்து வருபவர் பிரகதீஸ்வரன் (வயது 17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தனது நண்பர்களான மணிகண்டன், வினோத், வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய நால்வருடன் ஞாயிற்றுக்கிழமையன்று பிரகதீஸ்வரன் திருக்கோகர்ணம் புது தெருவில் உள்ள ராசா குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

இந்த குளமானது முன்பு கல்குவாரியாக இருந்த நிலையில், மலையில் பாறைகள் தோண்டி எடுக்கப்பட்டு தண்ணீர் சுரந்து தற்போது குளமாகியுள்ளது. இதில் அப்பகுதியினர் குளிப்பது வழக்கமான ஒன்றாகும். பிரகதீஸ்வரன் மாலை வேளையில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற நிலையில்,  வாட்சப்-ஸ்டேட்டஸ் வைப்பதற்காக மலை உச்சியிலிருந்து குளத்து தண்ணீரில் குதிக்க முயன்றுள்ளார்.

தொடர்ந்து அவர் மலை உச்சியிலிருந்து குதித்தபோது, தண்ணீரில் மூழ்கி வெளியே வராமல் இருந்ததால் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்க முயன்றுள்ளனர். இருப்பினும் அவரை, நண்பர்களால் தேடி கண்டுபிடிக்க இயலவில்லை என்பதால் அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிரகதீஸ்வரன் தேடியுள்ளனர். ஆனால், இரவு நேரமாகிவிட்டதால் தண்ணீரில் மூழ்கிய பிரகதீஸ்வரன் கண்டுபிடிக்க பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை மீண்டும் குளத்தில் இறங்கி பிரகதீஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சுமார் 5:30 மணி நேர தேடுதலுக்கு பின் பிரகதீஸ்வரனை சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத நிலையில், அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருக்கோகர்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது,  நண்பர்களுடன் குளிக்க சென்ற பிரகதீஸ்வரன் வாட்சப்- ஸ்டேட்டஸ் வைப்பதற்காக வீடியோ எடுக்க கூறிவிட்டு, மலை உச்சியிலிருந்து கீழே குதித்தபோது, குளத்தில் மூழ்கி பலியானார் என்பதும் தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement