தமிழகம்

சினிமாவை மிஞ்சிய அண்ணன் தம்பி பாசம்... தம்பியின் முடிவால் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த அண்ணன்..

Summary:

தம்பி உயிரிழந்த தகவலை கேட்டதும் அவரது அண்ணன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை

தம்பி உயிரிழந்த தகவலை கேட்டதும் அவரது அண்ணன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன்(41). இவருக்கு சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். சொந்தமாக கார் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டிவந்துள்ளார் ஸ்ரீகண்டன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீகண்டன் கடன் வாங்கி இன்னோவா கார் ஒன்றை வாங்கி, அந்த காரையும் வாடகைக்கு பயன்படுத்திவந்துள்ளார்.

ஆனால் போதிய வருமானம் இல்லாததால் அவருக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் ஸ்ரீகண்டன் கடந்த சில தினங்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பிய ஸ்ரீகண்டன் வீட்டில் யாரிடமும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அருகில் இருந்த ஸ்ரீகண்டனின் அண்ணன்களான பிரபாகரன், மற்றும் மணிகண்டன் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்களும் ஓடிவந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்ரீகண்டன் மினிவிசிறியில் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.

உடனே அவரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை கேட்டு அனைவரும் கதறி துடித்த நிலையில், தம்பி உயிரிழந்த தகவல் அறிந்து அவரது அண்ணன் மணிகண்டன் அங்கையே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தநிலையில், அவரை சோதித்த மருத்துவர்கள், மணிகண்டன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அண்ணன் தம்பி இருவரும் இப்படி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் தொடங்கி அங்கிருந்த மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


Advertisement