தமிழகம்

எங்களை உள்ளே விடமாட்டிங்களா..? மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்.!

Summary:

எங்களை உள்ளே விடமாட்டிங்களா..? மாவட்ட ஆட்சியரின் காரை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்.!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. அதில் 990 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 190 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றன.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளரின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மைத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சின்னையா வீட்டின் முன்பு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நபர்கள் திரண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வினரும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் செல்ல தொடங்கினர். அப்போது அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர். ஆனால் தி.மு.க.வினர்,  எங்களையும் வாக்கு எண்ணும் மையத்தின் அருகில் செல்ல அனுமதியுங்கள். இல்லை என்றால் அ.தி.மு.க.வினர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்ய வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் காரை தி.மு.க.வினர் வழிமறித்து முற்றுகையிட்டனர். பின்னர் அ.தி.மு.க.வினரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்து உள்ளதாக தி.மு.க.வினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார், அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement