கலைஞர் கருணாநிதி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த பலராமன் கொரோனாவால் திடீர் மரணம்!



Dmk Former North Chennai District Secretary Balaraman died

கொரோனாவால் பாதிக்கப்பட்டு  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலராமன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பெற்று வந்த பலராமன் உயிரிழந்தார். பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் முன்னாள் வட சென்னை மாவட்ட செயலாளரும் தணிக்கை குழு உறுப்பினருமான எல்.பலராமன் சென்னையின் திமுக முகங்களில் முக்கியமான ஒருவர். சென்னை துறைமுகம் தொகுதி மற்றும் வட சென்னை மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்தியவர். முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான திரு. எல்.பலராமன் கொரோனா நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. கழகத் தலைவராக இருந்து நம்மையெல்லாம் வளர்த்த கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றி ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச்செயலாளரையும் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றிய பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டும் அவர் கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர். இன்றைக்கு கழகம் அவரை இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது.திரு. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.