தமிழகம் Covid-19

கொரோனா நோயாளி மருத்துவமனை கழிவறையில் தற்கொலை! என்ன காரணம்? புதுக்கோட்டையில் பரபரப்பு!

Summary:

corona patient suicide in pudukkottai

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனை கழிவறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய ஆண் நபர் ஒருவர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவர் கடந்த 15ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது 16ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்தநிலையில் இன்று இரவு மருத்துவமனை கழிவறையில் அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனைப் பார்த்த மருத்துவ பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement