சென்னையில் இருந்து வந்தவர்களால் புதுக்கோட்டையில் பரவும் கொரோனா! பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை உள்பட பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பே இல்லாத மாவட்டமாக திகழ்ந்த புதுக்கோட்டையில், தற்போது கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது. இதில் 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூர், நமணசமுத்திரம், கடியாபட்டி, ராயவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்னையில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அரிமளத்திற்கு சென்னையில் இருந்து வந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமை படுத்திவிட்டு அந்த பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளனர். தற்போது தென்மாவட்டங்களில் சென்னையில் இருந்து வந்தவர்களால் கொரோனா அதிகரித்து வருகிறது.