தமிழகம்

சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கர விபத்து! வழியின்றி தவித்த பயணிகள்

Summary:

containers accident in chennai bypass

சென்னையில் பெருங்களத்தூரில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரவு 10 மணியளவில் இரண்டு கண்டெய்னர் லாரிகள் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரி, முடிச்சூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே பாய்ந்தது. அப்போது பெருங்களத்தூரில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை நோக்கி எதிர்புறமாக வந்துகொண்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரியின் மீது ஹூண்டாய் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. 

பெருங்களத்தூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்திற்கு காரணமான ஹூண்டாய் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

பெருங்களத்தூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியின் பின்னால் வந்த வாகனங்கள் முன்கூட்டியே சுதாரித்து நின்று கொண்டதால் பெருமளவில் விபத்து ஏற்படவில்லை. இரண்டு கண்டெய்னர் லாரிகள் மட்டும் மோதிக்கொண்டதால் உயிர்சேதமும் இல்லை. ஆனால் ஹூண்டாய் நிறுவன கண்டெய்னர் லாரியிடம் வேறு ஏதாவது சிறிய வாகனங்கள் சிக்கி இருந்தால் கண்டிப்பாக பெருமளவில் உயிர்சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என சாலையில் நின்றுகொண்டிருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு கண்டெய்னர் லாரிகள் மோதிக்கொண்டு சாலையின் குறுக்கே நின்று கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டன. தங்களது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய அனைவரும் நள்ளிரவில் நடுரோட்டில் நிற்கின்றனர். அவர்கள் திரும்பிச் செல்லவும் வழியில்லை.

விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மேலும் சாலையின் குறுக்கே மோதி நின்றுகொண்டிருக்கும் கண்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்துவது எப்படி என்றும் ஆலோசித்து வருகின்றனர். இந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்தினால் மட்டுமே பின்னால் இருக்கும் வாகனங்கள் செல்ல முடியும். இதனை எப்போது சரி செய்வார்களோ என அனைத்து வாகனங்களும் நடுரோட்டில் காத்துக்கிடக்கின்றன.


Advertisement