உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. எந்தெந்த மாவட்டங்களில் மழை? - சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai IMD Update Today

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 6 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

7 ஆம் தேதியில் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

10 ஆம் தேதியில் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும். அதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.