11 வயது சிறுமியை நெகிழ வைத்த சென்னை மாநகராட்சி.! இன்பத்தில் திக்குமுக்காடிப்போன குஜராத் சிறுமி.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அணைத்து போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி வெளிமாநில பயணிகள் சிலர் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தை வந்தடைந்தனர். அதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 11 வயது பெண் குழந்தை ஷிருஷ்டியும் ஒருவர். ஆன்மிக சுற்றுலா வந்திருந்த இவர்கள் ஊரடங்கு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை.
சிறுமி ஷிருஷ்டியின் குடும்பத்தினர் உட்பட 74 பேரை மீட்டு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கிண்டியில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்நிலையில், சிறுமி ஷிருஷ்டிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் தனது சொந்த மண்ணில் விமர்சியாக கொண்டாடும் ஷிருஷ்டி இந்தவருடம் ஊரடங்கில் சிக்கிக்கொண்டதால் பிறந்தநாளை கொண்டாடமுடியவில்லை. இதனால் சிறுமி ஷிருஷ்டி மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த தகவல் எப்படியோ சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியவரவே, சிறுமி ஷிருஷ்டிக்கு அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்துள்ளன்னர். அதன்படி, சிறுமியின் பெயர் பதித்து பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்து காப்பகத்தில் தங்கியிருந்த மக்களுடன் ஷிருஷ்டியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி ஷிருஷ்டி தனக்காக கேக் வாங்கி கொடுத்த அதிகாரிக்கு முதல் கேக்கை ஊட்டி பதில்மரியாதை செய்துள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.