சொகுசு கார் எரிப்பு சம்பவம்.! ஆறுதல் கூறி சசிகலா பேசும் ஆடியோ.!

சொகுசு கார் எரிப்பு சம்பவம்.! ஆறுதல் கூறி சசிகலா பேசும் ஆடியோ.!



car-damaged-of-a-person-removed-from-the-admk

சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். ஆனால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. 

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் சமீப காலமாக வெளியாகி அதிமுகவில் புதிய சலசலப்பை கிளப்பி வருகிறது. சசிகலாவுடன் பேசிய அதிமுக-வினர் மீது கட்சியின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சசிகலாவுடன் பேசியதால் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவரின் கார் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக-வில் இளைஞரணிச் செயலாளராக இருந்தவர் பரமக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ராஜா. கடந்த வாரம் இவரைத் தொடர்புகொண்டு சசிகலா பேசிய ஆடியோ ஊடகங்களில் வெளியானது. கட்சித் தலைமையை விமர்சித்துப் பேசினார் என இவர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் அவரது கார் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

சசிகலாவுடன் செல்போனில் பேசியதால் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது கார் எரிக்கப்பட்டுள்ளதாகவும், வின்சென்ட் ராஜா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வின்சன்ட் ராஜாவுக்கு சசிகலா தொலைபேசியில் ஆறுதல் கூறிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அதிமுகவில் இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காது என்று கூறும் சசிகலா, தைரியமாக இருக்குமாறு வின்சென்ட் ராஜாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.