கத்திக்குத்துடன் அரங்கேறிய பிறந்தநாள் கொண்டாட்டம்!, பரிதாபமாக பறிபோன உயிர்..!birthday celebration was finished with a death

திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள் குணசேவியர் (34). இவர் காய்கறி மற்றும் மர விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி லிதியாமேரி (29). இந்த தம்பதியினருக்கு, 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு10 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த நண்பரான பிரதீப் என்பவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள அருள் குணசேவியர் வேடப்பட்டி நாகம்மா கோவில் அருகில் சென்றுள்ளார். அங்கு அவருடன் அதே ஊரைச் சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட நண்பர்கள் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

அனைவரும் குடிபோதையில் இருந்ததால் அருள் குணசேவியருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு,  வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்களில் ஒருவர், தனது டூ-வீலரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருள் குணசேவியரை சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் நிலை குலைந்த அவர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மற்ற நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குணசேவியரை, மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கூறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த பாலா, மணிகண்டன், குட்டிமணி உட்பட மொத்தம் 6 பேர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அருள் குணசேவியருடன் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த அவர்களை காவல்துறையினர் தேடி சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனையடுத்து அவர்களை காவல்தூறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருள் குணசேவியர் மீது அடிதடி தகறாறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் வியாபாரி குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.