ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நொறுங்கியதில் பெண் பலி.! பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிர் தப்பியது.!

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நொறுங்கியதில் பெண் பலி.! பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிர் தப்பியது.!


ambulance accident in erode

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அண்ணாமடுவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி திவ்யாபாரதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தனியார் ஆம்புலன்சில், பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தனியார் ஆம்புலன்சில் குழந்தையுடன் விவேகானந்தன், அவருடைய தாய் மல்லிகா, அவருடைய பெரியம்மாள் அய்யம்மாள், தனியார் மருத்துவமனை செவிலியர் ஜோதிமணி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆம்புலன்சை அந்தியூரை சேர்ந்த மாவு பாஷா என்பவர் ஓட்டி சென்றார். பருவாச்சி என்ற இடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் ஆம்புலன்ஸ் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் நொறுங்கி சேதம் அடைந்தது. அங்கு நடந்த விபத்தில் குழந்தை மற்றும் விவேகானந்தனின் தாய் மல்லிகா தவிர அனைவரும் பலத்த காயமடைந்தனர்.

இதனையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அய்யம்மாள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.