அரசியல் தமிழகம்

பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி.! அதிரடி முடிவெடுத்த ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்.!

Summary:

பொள்ளாச்சி வழக்கில் கைதானதையடுத்து அதிமுக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பைக் பாபு, ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அந்த மூவரில் ஒருவர் அதிமுக பொள்ளாச்சி மாணவர் அணி நகர செயலாளர் என்பதும் தெரியவந்துள்ளது.

அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் அருளானந்தம், பைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர். கைதான 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Advertisement