
புதிய கட்சி தொடங்கலாம் என்று எண்ணம் இருக்கிறது என விருது வழங்கும் நிகழ்ச்சியில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அரசு அரசு சார்பில் வருடந்தோறும் நடத்தப்படும் இந்தியத் திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த விழாவில் கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குநர், நடிகர் பார்த்திபன் பேசுகையில், ''ரொம்ப கூல் ஆக இருந்தால் ஜெயிக்க முடியாது. கஷ்டப்பட்டுதான் ஜெயித்தேன். நடிக்க ஆசைப்பட்டுதான் திரைத்துறைக்கு வந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து வீட்டுக்குச் சென்றுவிடாமல், இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளரானேன்.
எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் நடிகர் என்பதாலேயே ஒருவரை அரசியலில் இருந்து ஒதுக்கத் தேவையில்லை எனவும் கூறினார். மேலும் பேசிய அவர், தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் நல்ல ஆட்சியை வழங்குவார்கள் எனக் கூறினார். புதிய கட்சியை நான்கூடத் தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை என்றார்.
Advertisement
Advertisement