ஓரின சேர்க்கைக்கு இணங்காததால் மாணவன் குத்திக் கொலை.. பட்டதாரி இளைஞரின் வெறிச்செயல்..!

கடலூர் மாவட்டம் மேல்புளியங்குடி கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி. இவருக்கு ஜீவா என்ற மகன் ஒருவர் உள்ளார். ஜீவா விருத்தாச்சலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் ஜீவா மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ராஜுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சுப்ரமணியன் மகன் ஆனந்த்(22) ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு மட்டுமல்லாமல் தடுக்க வந்த ஜீவாவின் நண்பர் பிரித்தீஷ் ராஜையும் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ஜீவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜீவாவும், ஆனந்தும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு நாள் ஆனந்த் ஜீவாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். அதனை ஜீவா மறுத்ததோடு மட்டுமல்லாமல் அவரை கோபமாக திட்டியும் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஆனந்த் ஜீவாவை வேறொரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தி தவறாக மற்றவரிடம் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜீவா ஆனந்த் வீட்டாரிடம் அவர் தன்னை ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தியதை கூறியுள்ளார். இதனால் கடும் கோபம் கொண்ட ஆனந்த் ஜீவாவை பழி வாங்குவதற்காக கத்தியால் குத்தி கொன்றார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஆனந்த் ஒரு பட்டதாரி என்றும் அவர் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.